உயிரைப் பறித்த ஊழியர்களின் "டார்ச்சர்" ? "ஸ்ரீராம் ஃபைனான்ஸ்" மீது பகீர் புகார்..!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வாகனக் கடனுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டவரை ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் மிரட்டியதாகக் கூறப்படும் நிலையில், அவர் மன அழுத்தத்துக்கு உள்ளாகி உடல்நிலை பாதித்து உயிரிழந்து விட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் இயங்கி வருகிறது ஸ்ரீராம் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம். அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர், இந்நிறுவனத்தில் கடன் பெற்று, கடந்த 2017ஆம் ஆண்டில் ஜேசிபி இயந்திரம் ஒன்றையும் லாரி ஒன்றையும் வாங்கியுள்ளார்.
ரவியின் குடும்ப நண்பரான நீலமேகம் என்பவர் அவருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார். மாதம் தவறாமல் தவணைத் தொகையை செலுத்தி வந்த ரவியால், கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக தொழில் பாதித்து, தவணைத் தொகையை செலுத்த முடியாமல் போயிருக்கிறது. இதனையடுத்து, அவரது வாகனங்களை ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் பறிமுதல் செய்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் மதிப்பு வாங்கிய கடன் தொகைக்கான வட்டிக்கே சரியாகி விட்டது என்று கூறி, மீதத் தொகையை கட்டச் சொல்லி, ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் ரவிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கிறது . ஒரு கட்டத்தில் தனக்காக ஜாமீன் கையெழுத்து போட்ட நீலமேகத்தைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் குடும்பத்துடன் ரவி தலைமறைவானார் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, பழகிய நட்புக்காக அவர் வாங்கிய கடனுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்ட நீலமேகத்தின் பக்கம் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நெருக்கடி திரும்பி இருக்கிறது. ரவி வாங்கிய கடன் தொகையைக் கட்டச் சொல்லி, ஃபைனான்ஸ் நிறுவன மேலாளர் ஆறுமுகம் உட்பட, ஊழியர்கள் நேரிலும் போனிலும் நீலமேகத்தைத் தொடர்பு கொண்டு ஆபாச சொற்களால் அர்ச்சனை செய்தனர் என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் 28ஆம் தேதி நீலமேகத்தின் வீட்டுக்கு நேரில் சென்ற ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், அவரது நிலத்தை எழுதிக் கொடுக்குமாறு கூறி, ஒருமையில் வசைபாடினர் என்று சொல்லப்படும் நிலையில், நொந்துபோன நீலமேகம், எப்படியாவது பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தால் போதும் என்ற எண்ணத்தில் தனது நிலத்தின் பத்திரத்தையும் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்தப் பத்திரத்தில் வில்லங்கம் இருப்பதாகக் கூறி, மீண்டும் நீலமேகத்தை நிறுவன ஊழியர்கள் டார்ச்சர் செய்யத் தொடங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
உச்சபட்ச மன அழுத்தத்துக்கு உள்ளான நீலமேகம், இரவு நேரங்களில் அழுவதும் புலம்புவதுமாக இருந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து வந்த அழைப்பை ஏற்று பேசிக் கொண்டிருந்த 62 வயதான நீலமேகம், திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அவரது உடலை டிராக்டரில் எடுத்துச் சென்ற உறவினர்கள், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முன்பு சாலையில் கிடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் சமாதானத்துக்குப் பின்பு, உறவினர்கள் கலைந்து சென்ற நிலையில், நீலமேகத்தின் மகன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் தற்போது மூடப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தரப்பு விளக்கத்தை கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Comments